‘வரும், 7ல், மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழா, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில் நடக்கிறது’ என, கலெக்டர் உமா தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தில், மாவட்ட இயக்க மேலாண் அலகின் மூலம், படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.அதன்படி, மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழா, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், வரும், 7 காலை, 9:00 முதல், மாலை, 3:00 மணி வரை நடக்கிறது.
இந்த இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழாவில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு, பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து, பயிற்சி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு, பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்கள், ‘திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு, கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், நாமக்கல் மாவட்டம்’. தொலைபேசி எண், 04286 281131 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, தங்களது நிறுவனத்தின் பெயரை, வரும், 6 மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.