ஜிம் பிரியர்கள் பலரை சமீப காலங்களில் ஈர்த்துள்ள ஓர் உடற்பயிற்சி முறை கிராஸ்ஃபிட் பயிற்சி. தற்போது பெரும்பாலான ஜிம்களில் கிராஸ்ஃபிட் டிரெய்னர்கள் பலர் பலவித கிராஸ்ஃபிட் பயிற்சிகளை அளிக்கத் துவங்கிவிட்டனர். இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். தொடர்ந்து பல நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே மாதிரியான உடல் அசைவுகளை மேற்கொண்டு பயிற்சி செய்வதன்பெயர் கிராஸ்பிட் பயிற்சி. பளு தூக்குதல், சிறிய டம்பெல் தூக்கிப் பயிற்சி மேற்கொள்ளுதல், தரையில் படுத்துக்கொண்டு இடை, கை, கால்களை அசைத்துப் பயிற்சி செய்தல், புல் அப்ஸ் செய்தல், படிமீது ஏறி இறங்குதல் உள்ளிட்டவை கிராஸ்ஃபிட் டிரெய்னிங்கில் அடங்குபவை. ஜிம் இயந்திரங்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் மற்ற பயிற்சிகளைக் காட்டிலும் கிராஸ்ஃபிட் பயிற்சிகளுக்கு ஓர் சிறப்பு உண்டு.
ஒருவர் கிராஸ்ஃபிட் பயிற்சிகளைத் தொடர்ந்து 10-15 நிமிடங்கள் தொடர்ந்து செய்யும்போது அவர்களது உடலில் கலோரிகள் வேகமாக எரிக்கப்படுவதோடு மட்டுமின்றி பயிற்சி முடிந்த பிறகும் சில நிமிடங்கள் கலோரிகள் எரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். இதனால் அடிவயிறு, இடுப்புத் தசைகளில் உள்ள கொழுப்பை விரைவில் கரைக்க இயலும். ஆனால் கிராஸ்ஃபிட் பயிற்சிகளை பயிற்சியாளர் உதவியின்றி செய்வது ஆபத்தானது. இதனால் தசைப் பிடிப்பு, தசை வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சரியான முறையைப் பின்பற்றி கிராஸ்ஃபிட் பயிற்சி செய்வது அவசியம். ஆண்கள், நடுத்தர வயதுப் பெண்கள் என அனைவரும் கிராஸ்ஃபிட் பயிற்சி மேற்கொள்ளலாம். பெண்கள் கர்ப்ப காலத்துக்குப் பின்னர் ஏற்படும் வயிற்றுத் தசை சுருக்கத்தைப் போக்க கிராஸ்ஃபிட், ஏரோபிக்ஸ் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்வர்.