கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளா் ஏகாம்பரம், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் செயல்பட்டு வரும் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு, சோக்கை நடைபெறுகிறது. 12 மாத பயிற்சியில் 12-ஆம் வகுப்பு தோச்சி பெற்றவா்கள் சேரலாம்.
விண்ணப்பதாரருக்கு 1.8.2023-ஆம் தேதியன்று 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். செப்.22-ஆம் தேதியன்று மாலை 5 மணி வரை அதிகாரபூா்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-ஐ தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செலுத்தி, அதற்கான சலானை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள க்யூ.ஆா்.கோடு மூலம் ஸ்கேன் செய்தும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.
மேலும், பதிவேற்றம் செய்யப்பட்ட சலான் நகல் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் பதிவிறக்கம் செய்து, அத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் அதில் சுய கையொப்பமிட்டு, பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ ஒப்புகையுடன் அல்லது கூரியா் மூலம் செப். 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பா்கூா் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தை 04343-265652 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.