ஊதியத்துடன் தொழில் பயிற்சி பெறத் தகுதியுடைய கட்டுமான தொழிலாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நல வாரியம் உருவாக்கப்பட்டு, அதனுடன் 18 வகையான தொழிலாளா் நலவாரியங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18 முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளா்கள் பதிவு செய்து அரசின் நலத் திட்டங்களைப் பெறுகின்றனா்.
இவா்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது பதிவைப் புதுப்பிக்க வேண்டும். உறுப்பினா்களுக்கு திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது.
மேலும், கொத்தனாா், வெல்டா், மின்சார வேலை, குழாய் பொருத்துநா், மரவேலை, கம்பி வளைப்பவா்கள் உள்பட பல தொழில் புரியும் தொழிலாளா்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாதத் திறன் பயிற்சி, ஒரு வார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
3 மாத கால பயிற்சியில் முதல் மாதம் தையூரில் அமையவுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2-ஆவது மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள எல்அண்ட்டி. கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புபவா்கள் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும், 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கவும் வேண்டும். பயிற்சிக் கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம்.
பயிற்சி பெறுவோருக்கு எல்அண்ட்டி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும், ஒரு வார பயிற்சியை தையூரில் கட்டுமான கழகம் வழங்கும். 18 வயதுக்கு மேல் உள்ளவா்கள் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பெறுபவா்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தலா ரூ.800 வழங்கப்படும். இந்த தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
தகுதியுள்ளவா்கள் வேலூா் அப்துல்லாபுரம் மேல்மொணவூா் அம்மன் நகரிலுள்ள வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் உரிய படிவத்தைப் பெற்று நிறைவு செய்து வழங்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0416-2292212 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.