Constitution (128th Amendment) Bill 2023 PDF
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின்னர், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மகளிர் இடஒதுக்கீடு அமலாக குறைந்தது 6 ஆண்டுகள் ஆகும் நிலை உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அவர் கூறும்போது,’ மக்களவையில் தற்போது 82 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அவர்கள் எண்ணிக்கை 181 ஆக உயரும்’ என்றார். நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ததும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, மாநிலங்களவையில் நாளை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது பெரும்பாலான கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதால், மசோதா ஒரு மனதாக நிறைவேறுவது உறுதியாகி உள்ளது. இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன் ஆதினியம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி அமலுக்கு வந்த 15 ஆண்டுகளுக்கு மகளிருக்கான இடஒதுக்கீடு தொடரும்.
இந்த 33 சதவீத இடஒதுக்கீடு இடங்களுக்குள் எஸ்சி/எஸ்டியினருக்கான ஒதுக்கீடும் அடங்கும். இதற்காக அரசியலமைப்பு பிரிவு 128வது திருத்தம் மசோதா 2023, துணை பட்டியல் மூலம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மசோதா 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நடைமுறைக்கு வராது என்று கூறப்படுகிறது. ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு இடஒதுக்கீடு எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும். இந்த மசோதாவின் படி ஒவ்வொரு எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நடைமுறைக்கு வருவதற்கு முன் பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்விவரம் வருமாறு:
- மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் (128வது திருத்தம்) மசோதா சட்டமாக மாறியதும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன் பின்னரே மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறுவதற்கு குறைந்தபட்சம் 50 சதவீத மாநில சட்டபேரவைகளின் ஒப்புதல் பெற வேண்டும்.
- ஏனெனில் இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் என்பதால், மாநில சட்டசபைகளின் ஒப்புதல் அவசியம்.
- புதிய மசோதா அடிப்படையில் 2026 க்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லை நிர்ணய செயல்முறை மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- 2026க்குப் பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2031ல் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து தொகுதிகள் வரையறுத்தல் அல்லது மறுவடிவமைப்பு செய்யப்படும்.
- கொரோனா தொற்று பரவியதால் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. 2029மக்களவை தேர்தலுக்கு முன், பெண்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றால் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதனால், இந்த மசோதா அமலுக்கு வர குறைந்தது 6 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
2029 அல்லது 2034 எப்போது அமலாகும்?
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டாலும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு 2029ம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வரக்கூடும். திருத்தப்பட்ட அரசியலமைப்பின் 82வது பிரிவு, 2026க்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணய செயல்முறையை மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது. முதலில், 2026க்குப் பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031 இல் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து எல்லை நிர்ணயம் செய்யப்படும்.
ஆனால் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஆனது. ஒன்றிய அரசு நினைத்தால் 2027ல் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால் 2029ல் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தவாய்ப்பு உள்ளது. 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றால் 2031ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பிறகு 2034ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தான் மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.