செங்கல்பட்டு–தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் பெற, நலிவடைந்த மற்றும் அரசு நிலங்களில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம்.செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வண்டலுார் தாலுகா முருகமங்கலத்தில் 1,260 வீடுகள்; கீரப்பாக்கத்தில் 1,760 வீடுகள்; தாம்பரம் மாநகராட்சியில் அன்னை அஞ்சுகம் நகரில் 192 மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் 4,284 அடுக்குமாடி வீடுகள் கட்டி முடியும் தருவாயில் உள்ளன.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.அரசின் மானிய தொகை போக, மீதி பங்கு தொகையை செலுத்துவதற்கு, விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் கீழ் வருமானம் பெறக்கூடியவராக இருக்க வேண்டும். இந்தியாவில் வேறெங்கும் சொந்த வீடு, வீட்டுமனை இருக்கக்கூடாது. நகர்ப்புற பொருளாதாரத்தில் பின் தங்கியவராக இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வரும் 22ம் தேதி காலை 11:00 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், முகாம் நடக்கிறது.விண்ணப்பிக்கும்போது, குடும்ப தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல் கொண்டுவர வேண்டும். பயனாளிகளுக்கு வங்கி கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.