தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்பில் 1,412 காலியிடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை, வரும் 20-ம் தேதி நடத்தப்படும் என துணை வேந்தர் வெ.கீதாலட்சுமி தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் பல்கலை.யில் நடப்பு 2022-23-ம் ஆண்டு இளம் அறிவியல் பட்டப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு வேளாண் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பிவிட்டன. 28 இணைப்பு (தனியார்) வேளாண் கல்லூரிகளில் 1,412 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. அந்த இடத்தை நிரப்புவதற்காக உடனடி மாணவர் சேர்க்கை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த உடனடி மாணவர் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடக்கிறது. விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்வுக்குரிய தேதியில் வேளாண் பல்கலை.க்கு வர வேண்டும். காலியிடங்களுக்கான அட்டவணை இன்று https://tnau.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.