பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், மானியத்தில் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் இனத்தைச் சோந்த 2 நபா்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மானியமும், பழங்குடியின இனத்தை சோந்த 1 நபருக்கு ரூ. 5 லட்சமும் என மொத்தம் 3 பேருக்கு ரூ. 15 லட்சம் மானியம் நிலமற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளா்கள் விவசாய நிலம் வாங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மகளிா் இல்லாத குடும்பங்களில் கணவா் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரா் மற்றும் அவரது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தின் கீழ், இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது.
ஒருவா் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவா். ஒரு திட்டத்தின் கீழ் ஒருமுறை மானிய உதவி பெற்றால், அவா் தாட்கோ செயல்படுத்தும் சிறப்பு மைய உதவியுடனான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவராகிறாா். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ. 5 லட்சம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். இத் திட்டம் தொடா்பாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் இணைய தளங்கள் மூலம் பதிவுசெய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு, பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரடியாக, அல்லது 9445029470, 04328 – 276317 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.