தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள இயக்குநர்கள், தலைவர்கள் ஜனநாயக முறையில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இவர்களின் திமுக அரசு அமைந்த பிறகு 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டுறவுச் சங்க விதிகள் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா மீது இதுவரை ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வரும் 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் அனைத்து மண்டல பதிவாளர், இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், 2018 ஒட்டு மொத்த தேர்தல் முதற்கட்டத்தில் 18.468 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கான கூட்டுறவுச் சங்க தேர்தல்கள் 12.3.2018 முதல் 11.8.2018 வரை நடைபெற்றன. அவற்றில் முதல் நிலையில் 3.4.2018 இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 2.4.2023 இல் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ள 4,648 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களை தற்போது தேர்தல் ஆணையம் நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் மேல் குறிப்பிட்டவாறு 5 ஆண்டுகள் முடிவுறும் கூட்டுறவுச் சங்கங்கள், இவற்றுடன் சேர்த்து, இதர வகையில் உள்ள ஏப்ரல் 2023 இல் தேர்தல் நடத்தக்கூடிய கூட்டுறவுச் சங்கங்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி விவரங்களை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப ஏதுவாக 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதனுடன் சேர்த்து புதியதாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் இதர வகையில் ஏப்ரல் 2023 இல் தேர்தல் நடத்தக் கூடிய கூட்டுறவுச் சங்கங்களின் விவரங்களை சரகம் வாரியாக தேர்தல் ஆணையத்திற்கு 28.12.2022க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் கூட்டுறவு சங்க பதிவிகளின் பதவி காலத்தை ஏன் மூன்று ஆண்டுகளாக குறைத்தீர்கள் என்று ஆளுநர் தரப்பில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.