சொத்து விற்பனையின்போது, பழைய அசல் பத்திரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம்’ என, பதிவுத் துறை தலைவர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுஉள்ளது. அசல் தாய்ப்பத்திரம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய, பதிவுத் துறை தடை விதித்துஉள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மனு தொடர்பாக, பதிவுத் துறை பிறப்பித்த உத்தரவு:இதில், மனுதாரரிடம் அசல் பத்திரம் இல்லை. அவரது சகோதரியிடம் இருப்பதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை அவர் காட்டியுள்ளார்.எனவே, இதை கருத்தில் வைத்து அசல் ஆவணம் கேட்காமல், சண்முகவேலின் பத்திரத்தை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சார் – பதிவாளர்கள் கூறியதாவது: ஒரு நபரிடம் அசல் தாய்ப்பத்திரம் இல்லாத நிலையில், அது குறித்த நிலவரத்தை, அவர் ஆதாரத்துடன் தாக்கல் செய்தால், பதிவுக்கு ஏற்கலாம் என்பதற்கு, இது புதிய வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. இதனால், பழைய அசல் ஆவணம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய வேண்டாம் என்ற, முந்தைய உத்தரவு கேள்விக்குறியாகி உள்ளது.இந்த விஷயத்தில், என்னென்ன நிலைகளில் விதிவிலக்குகள் தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ந்து, அதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.