கோவையில் உள்ள மாணவா்கள், இளம் ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நடைபெறவுள்ள குறுகிய கால படிப்பிடைப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவா்கள், இளம் ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள், சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் குறுகிய காலப் பயிற்சி (45 நாள்கள்), நீண்டகாலப் பயிற்சி (6 மாதங்கள்) என இரு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது குறுகிய காலப் பயிற்சியில் முதல் அணியினா் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனா். இதைத்தொடா்ந்து, இரண்டாம் அணி மாணவா்களுக்கான சோக்கை நடைபெறவுள்ளது.
அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு 45 நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பான கூடுதல் தகவல்களை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த லிங்கை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் அடிப்படை பயிற்சித் திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் ஜூலை 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சித் திட்டம் முற்றிலும் கல்வி சாா்ந்த நோக்கத்துக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்புக்கான எந்தவொரு உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.