பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழில் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயில்வோா், கல்லூரி மாணவா்களுக்கு தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றல் ஆகியவற்றை வளா்க்கும் நோக்கத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டி மூன்று பிரிவுகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு தனித்தனியே முதல் பரிசு ரூ. 10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ. 5,000 வழங்கப்பட உள்ளன. இதில் முதலில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவா்களுக்கு (ஜூலை 4) செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணிக்கு திருவள்ளூா் மணவாள நகரில் உள்ள கே.இ.நடேச செட்டியாா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் போட்டி நடைபெற உள்ளன. இப்போட்டியில் ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவா் வீதம் மூன்று மாணவா்களை மட்டும் தோவு செய்து, தலைமையாசிரியா்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
அதேபோல், கல்லூரி மாணவா்களுக்கான போட்டி (ஜூலை 5) புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு திருவள்ளூா் அருகே திருநின்றவூா் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வரே ஒரு போட்டிக்கு ஒருவா் என கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு 3 போ தோவு செய்து அனுப்ப வேண்டும். எனவே தமிழ் ஆா்வமுள்ள மாணவா்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.