சேமிப்புக் கணக்கு, நடப்புக்கணக்கு என ஒருவர் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது பல்வேறு நேரங்களில் உதவிகரமாக இருக்கும்.
எனினும் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும்போது வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சொந்த ஊரில் உள்ள வங்கியில் முதலாவதாக துவங்கிய வங்கிக்கணக்கு, பின் மாத ஊதியம் வருவதற்கு பணியாற்றும் நிறுவனம் சொல்லும் வங்கியில் ஒரு சேமிப்புக்கணக்கு என பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைத் தொடங்கும் நிலை உருவாகிறது.
அவ்வாறு ஒன்றுக்கும் அதிகமான வங்கிக்கணக்குகளை வைத்திருப்பது உச்சிதம் தான். இருப்பினும் இந்த விஷயங்களை மட்டும் கவனத்தில் கொள்வது அவசியம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. அவற்றில் சில சேவைகளானது இலவசமாக மற்றும் சில சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆகவே பிடித்தம் செய்யும் சேவைக் கட்டணத்தை கணக்கில் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் உள்ள ஒரு சிறிய தொகை கூட, இச்சேவைக் கட்டணத்துக்காக பிடித்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
பல்வேறு வங்கிகள் குறைந்தபட்சம் இருப்புத்தொகையை கட்டாயமாக்கி இருக்கிறது. அதிலும் ஒருசில வங்கிகள் பெரும் தொகையை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அவ்வாறு இல்லையெனில் அதற்கு அபராதம் விதிக்கப்படும். ஒரு வங்கிக் கணக்கு என்றால் பரவாயில்லை. ஆனால் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக்கணக்குகளில் இவ்வாறு குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிப்பது சற்று சவாலாக இருக்கும். ஆகவே தேவையற்ற வங்கிக் கணக்குகள் இருப்பை மூடிவிட்டு, குறைந்தபட்ச இருப்புத்தொகை குறைவாக இருக்கும் வங்கிகளில் புது கணக்குகளைத் தொடங்கிக் கொள்ளலாம்.
ஒரு பண அட்டையில் நாளொன்றுக்கு இவ்வளவு தொகைதான் எடுக்க முடியும் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதனை விட அதிகபணம் தேவைப்படும்போது ஒன்றுக்கும் அதிகமான வங்கி அட்டைகள் வைத்திருப்பது பயன் உள்ளதாக இருக்கும். ஒரு நபர் எவ்வளவு வங்கிக் கணக்குகள் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு எந்த வரைமுறையும் கிடையாது. இருப்பினும் ஒரு வங்கிக்கணக்கை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தா விட்டால் அதனை செயலற்ற வங்கிக் கணக்காக வங்கிகள் அறிவித்துவிடுவதும் வழக்கம்.