பெங்களூரு: ‘வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அரசின் இலவச மின்சாரம் பெற, ‘சேவா சிந்து’ இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் இணைத்தால் போதும்,’ என மின் துறை அறிவித்துள்ளது.
கர்நாடகா அரசின் ‘கிரஹ ஜோதி’ திட்டத்தின் மூலம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில், உரிமையாளரின் பெயரில் உள்ள ஒரு வீட்டுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பது உட்பட பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இதனால் கோபமடைந்த மக்கள், ‘அனைவருக்கும் இலவச மின்சாரம் என்று கூறி தான் ஆட்சிக்கு வந்தனர். இப்போது வீட்டு உரிமையாளர் பெயர் உள்ள ஒரு வீட்டுக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறுவது எந்த விதத்தில் நியாயம். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இந்த சலுகைகள் இல்லையா’ என கேள்வி எழுப்பினர்.
இது குறித்து மின்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
வீட்டில் மின்சாரம் பயன்படுத்துபவர், வாடகைதாரராக இருந்தால், சேவா சிந்து இணையதளத்தில், தான் வசிக்கும் வீட்டின் முகவரியுடன், ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், இந்த வசதியை பெறலாம். ‘கிரஹ ஜோதி’ திட்டம் சில நிபந்தனைகளுடன் ஜூலை 1ம் தேதி முதல் செயல் படுத்தப்படும். இத்திட்டத்தின் பதிவு இன்று முதல் துவங்குகிறது.
இத்திட்டத்தின் பலனை பெற விரும்பும் பயனாளிகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட https://sevasindhuservices.karnataka.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.