நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 3 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மே மாதம் 4.40 சதவீதம், ஜூன் மாதம் 4.90 சதவீதம், ஆகஸ்ட் மாதம் 5.40 சதவீதம் என வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதமும், பிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளுக்கான வட்டி விகிதமும் கணிசமான அளவு உயர்ந்தது.
சமீப காலமாக சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், 2022-23ம் நிதியாண்டின் 3வது காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு வருட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. 2 வருட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகவும், 3 வருட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதந்திர வருவாய் கணக்கு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 123 மாதங்களில் முதிர்ச்சி பெறும் கிஷான் விகாஸ் பத்திரத்திற்கான வட்டி வகிதம் 6.9 சதவீதத்தில் இருந்து 7.0 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.