கோவை மாவட்டத்தில் படித்த, சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்களைஊக்கப்படுத்தும் நோக்கத்துடன், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொழில் சார் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம்.
21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு, 35 வயது, சிறப்பு பிரிவினருக்கு, 45 வயதாக இருக்க வேண்டும்.சிறப்பு பிரிவில் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தகுதியானவர்கள்.ரூ.10 லட்சம் முதல், 5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில், உற்பத்தி அல்லது சேவை சார்ந்த தொழில்கள் துவங்க விண்ணப்பிக்கலாம்; அரசு சார்பில் ரூ.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் பெருமளவில் பயனடையும் வகையில், ஆட்டோ, டாக்ஸி, டூரிஸ்ட் வாகனங்கள், போர்வெல் வாகனம், கான்கிரீட் கலவை வாகனம் வாங்கி, தொழில் துவங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.