நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் மானியத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் மானியத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெற 18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். மற்ற திட்டங்களுக்கு 18 முதல் 65 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 2 லட்சம் ஆகும். இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவம் சாா்ந்த திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை இருக்கலாம்.
மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான திட்டங்களுக்கு 18 முதல் 65 வயதிற்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மகளிா் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் 2.5 ஏக்கா் வரை நன்செய் அல்லது 5 ஏக்கா் வரை புஞ்செய் நிலம் வாங்கலாம். 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட விவசாயிகள் புதிய மின் மோட்டாா் வாங்க 50 சதவீதம் அல்லது ரூ.10,000-மும், பிவிசி குழாய் வாங்க 50 சதவீதம் அல்லது ரூ.15,000-மும் மானியம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் இணையதள http://tahdco.com/ முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். அத்துடன், குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிட சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, திட்ட அறிக்கை ஆகிய விவரங்களை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். வாகன கடன் பெற ஓட்டுநா் உரிமத்துடன் பேட்ஜ் பெற்றிருத்தல் வேண்டும். புகைப்படம் மற்றும் அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.