இலவச பயிற்சி வகுப்புகள்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு கலங்கரை விளக்கம் என பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 23-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
7 மையங்கள்:
கரூர் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட மைய நூலகமும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டிடம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாயனூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு காணியாளம்பட்டி அரசு பல்வகை தொழில்நுட்பக்கல்லூரியும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த 7 பயிற்சி மையங்களில் வாரந்தோறும் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.
நேரலை வகுப்புகள்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் எவ்வாறு தேர்வுகள் நடத்தப்படுகின்றதோ, அதேபோல் ஓ.எம்.ஆர். தாளில் விடையளிக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும். மதியம் பயிற்சி மையத்தில் படிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த 7 மையங்களிலும், ஜூம் செயலி மூலம், துறை ரீதியான வல்லுனர்களைக்கொண்டு நேரலையாக போட்டித்தேர்வுக்கான வகுப்புகள் எடுக்கப்படும். இந்த நேரலை வகுப்புகளில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளும் வகையிலும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும் பயிற்சி வகுப்புகள் அமையும்.
மாதிரி வினாத்தாள்கள்
இவ்வாறு நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை அனைவரும் கண்டு பயிலும் வகையிலும், நேரில் வர இயலாதவர்கள் பயன்பெறும் வகையிலும் யூடியூப் வாயிலாக அனைத்து வகுப்புகளும் நேரலை செய்யப்படும். மேலும், மாவட்ட மைய நூலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 34 கிளை நூலகங்கள், 57 ஊர்ப்புற நூலகங்களிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள 157 அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள் என மொத்தம் 249 நூலகங்களிலும் போட்டித்தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள், தேர்வு எழுதுவதற்கான ஓ.எம்.ஆர். தாள்கள் இலவசமாக வழங்கப்படும்.
தேர்வு எழுதும் அனைவரது விடைத்தாள்களும் பிரத்யேகமான ஓ.எம்.ஆர். விடைத்தாள் மதிப்பிடும் கருவியின் மூலம் திருத்தப்பட்டு, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றப்படும். போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்குபெற விரும்பும் நபர்கள் Click Here to Register என்ற இணைப்பு மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலக அலுவலரை 04324-263550 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். karur.nic.in என்ற இணையதளத்திலும் தகவல்களை பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.