ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்றும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவர் எனக் கூறி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சுற்றரிக்கை வெளியிட்டு இருந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் எம்.சரோஜினி, எஸ்.சுதா உள்பட நான்கு ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு முன்பாகவே, பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை என கடந்த 2013, செப்டம்பர் 20-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2011-இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து பணியில் சேரும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எனவே, அதற்கு முன்பு பணியில் சேர்ந்த தங்களுக்கு இது பொருந்தாது என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனுக்கள் அப்போதைய சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு, நவம்பர் 15-ஆம் தேதிக்கு பின்பு பணியில் சேரும் ஆசிரியர்கள் மட்டுமே தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு பொருந்தும்.
அதற்கு முன்னர் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமல்ல. அவர்கள் தேர்வை எழுத வேண்டியது இல்லை. அவர்களை கட்டாயப்படுத்தவும் கூடாது என கருத்து தெரிவித்திருந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை. தேர்ச்சி பெறாவிட்டாலும் ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். ஆனால் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்.
நேரடி நியமன ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.