தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், ஆவின் நிறுவனத்துக்கு, 1,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்,” என, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.
நாமக்கல்லில் அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்ட புதிய பால்பண்ணை வளாகத்தில், 84 கோடி ரூபாய் மதிப்பில், பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுகிறது.பால் உற்பத்தி விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. வரும், 27ல் நடக்கும் ஆய்வு கூட்டத்தில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆட்சியில், மூன்று, நான்கு மாதம் பணம் நிலுவை இருந்தது. தற்போது, ஏழு நாட்கள் மட்டுமே பாக்கி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கள்ளக்குறிச்சி, திருப்பத்துார் என, இரு ஒன்றியங்கள் துவக்கப்படும். கோவில்களில், ஆவின் நெய் தான் வாங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில், 15 கோடி ரூபாய் மதிப்பில், 500 டன் பால் டவுடர், இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.தமிழக அரசின் சார்புடைய அனைத்து துறைகளிலும், ஆவின் பொருட்களை தான் வாங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆவின் விற்பனை, 57 கோடி ரூபாயில் இருந்து, 87 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆவின் நிர்வாகத்தில், கடந்த ஆட்சியில் முறைகேடுகள் செய்ததால், நியமனங்களை நிறுத்தி வைத்துள்ளோம். விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 1,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.