புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை சென்டாக் நிர்வாகம் நடத்தி வருகிறது.
அதன்படி ‘நீட்’ அல்லாத பாடப் பிரிவுகளுக்கு கடந்த மே 17 ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது.
அதன் மெரிட் லிஸ்ட் கடந்த 27ம் தேதி வெளியிட்டதை தொடர்ந்து விரை வில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் புதுச்சேரியில் 3,140 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா தெரிவித்துள்ளார்.
அவரது செய்தி குறிப்பு:
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத் துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லுாரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத மருத்துவம், பி.வி.எஸ்.சி. & ஏ.எச்., படிப்புகளில் சேர நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு மற்றும் சுய ஆதரவு (எஸ்.எஸ்) ஒதுக்கீட்டின் கீழ் இன்று 12ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது, நீட் தரவரிசை இடத்தில் அகில இந்திய அளவிலான தரவரிசையை குறிப்பிட வேண்டும். கால்நடை மருத்துவ படிப்பில் தேசிய சுய ஆதரவு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஓ.பி.சி., விண்ணப்பதாரர்கள் தங்களது கிரிமிலேயர் அல்லாத ஓ.பி.சி., சான்றிதழை இணைக்க வேண்டும்.