சொந்த வீடு என்பது பலரின் கனவாக இருக்கிறது. பணம் இருந்தாலும் வீட்டுக் கடன் கிடைத்தாலும், வீடு வாங்கும் செயல்முறை அவ்வளவு எளிதானதல்ல! வீடு கட்டுவது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குவது என்னும் போது, நீங்கள் பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மோசடிகள் நடக்கும் பல துறைகளில் இதுவும் ஒன்று. வீடு வாங்குவதற்கான முதல்படி விற்பனை ஒப்பந்தத்தை நீங்கள் சரிபார்ப்பதுதான். ஏமாறாமல் இருப்பது ஒரு பக்கம் என்றாலும், வேறு சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டும். பின்வரும் விஷயங்கள் விற்பனை ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும்.
குறிப்பட்ட காலத்துக்குள் ஒப்பந்தம் நிறைவேற வேண்டும்:
வீடு வாங்குவதற்கான விற்பனை ஒப்பந்தத்தில் வாங்குபவர் கையெழுத்திடும் பொழுதே டோக்கன் அட்வான்ஸ் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். அதன் பிறகு சில மாதங்கள் முதல் என்று கால அளவு நிர்ணயிக்கப்பட்டு வாங்குபவர் மற்றும் விற்பவர் இரண்டு தரப்பினருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் அட்வான்ஸ் செலுத்திய தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வீட்டை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் அல்லது விற்பவர் ஆறு மாதங்களுக்குள் உங்களிடமிருந்து முழு தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து தருவதாக ஏற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு விற்பனை ஒப்பந்தத்தில் உங்கள் இருவருக்கும் பொருந்துமாறு குறிப்பிட்ட கால அளவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். இல்லையென்றால் அட்வான்ஸ் தொகையை வாங்கிக்கொண்டு வீடு விற்பனை செய்பவர் இழுத்தடிக்கலாம். ஒரு வேளை நீங்கள் வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவராக இருந்தால் வங்கிக்கடன் உங்களுக்கு சாங்க்ஷன் ஆகி பின்பு வீடு விற்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டால் அது பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இழப்பீட்டுத் தொகை:
நீங்கள் வீடு வாங்கும் போது அட்வான்ஸ் செலுத்திய பின்பு, அதன் பிறகு ஏதேனும் ஒரு காரணத்தினால் வீட்டை வாங்க முடியாத சூழல் ஏற்படும் போது நீங்கள் செலுத்திய அட்வான்ஸ் தொகை விற்பவரால் உங்களுக்கு திருப்பி செலுத்தப்படாது. இது வீடு விற்பனை செய்பவருக்கான பாதுகாப்பு ஏற்பாடு. இருந்தாலும், சில நேரங்களில் வீட்டை விற்பவர் கூட கடைசி நேரத்தில் வீட்டை விற்கும் எண்ணம் இல்லை என்று ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.
ஆனால் அந்த சூழல்களில் வாங்குபவருக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குறிப்பிட்ட காலத்துக்குள் நீங்கள் வீட்டுக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றி உங்கள் பெயருக்கு வீட்டை மாற்றித் தர வேண்டும் என்பதையும், விற்பவர் கடைசி நேரத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நீங்கள் செலுத்திய அட்வான்ஸ் தொகையை மட்டும் அல்லாமல் அதற்கு இழப்பீட்டையும் செலுத்த வேண்டும் என்பதை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.
விற்பனை ஒப்பந்தம் எந்த காரணங்களுக்காக ரத்து செய்யப்படலாம், அவ்வாறு விற்பனை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் பொழுது யாருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்; வாங்குபவர் ரத்து செய்தால் விற்பவருக்கு அதற்கு எவ்வாறு ஈடுசெய்ய வேண்டும் மற்றும் விற்பவர் ரத்து செய்தால் வாங்குபவருக்கு எவ்வாறு ஈடுசெய்ய வேண்டும் என்ற விவரங்கள் அனைத்தையுமே விற்பனை ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டால் இரண்டு தரப்புக்குமே பாதகம் இல்லாமல் முடியும்.
நீங்கள் வாங்கவிருக்கும் சொத்து பற்றிய முழு விவரங்கள்:
பொதுவாகவே ஒரு மனை வாங்கும் போது அதற்கு பட்டா இருக்கிறதா, அது யார் பெயரில் இருக்கிறது, அதனுடைய சர்வே எண், வில்லங்கம் உள்ளதா என்று எல்லாவற்றையும் தெளிவாக பார்த்து தான் வாங்குவோம். அப்படி இருக்கும் நிலையில், வீடு வாங்கும் போது வீட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் விற்பனை செய்பவர் தெரிவிக்க வேண்டும். வீடு யார் பெயரில் இருக்கிறது, வீட்டின் பெயரில் கடன் வாங்கப்பட்டு இருக்கிறதா, வீட்டின் சொத்து மதிப்பு, வீட்டினுடைய பட்டா, இதற்கு முந்தைய வீட்டு உரிமையாளர்கள், நிலத்தின் மதிப்பு என்று அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். வாங்குபவர் தான் வாங்கவிருக்கும் சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு விற்பனை செய்பவர் உதவ வேண்டும்.
எப்போது வேண்டுமானால் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்:
ஏற்கனவே கூறியுள்ளது போல விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்குமே இருக்கிறது. ஒருவேளை வாங்குபவர் ஒரு வீட்டை பார்த்து அதற்கான அட்வான்ஸ் தொகையை செலுத்தி அதன் பிறகு வீட்டின் வில்லங்க சான்றிதழ் அல்லது வீட்டின் உரிமையாளர் அல்லது வீட்டின் மீது கடன் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் ஆக இருந்தாலுமே அந்த வீட்டை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்தால், அதற்கான உரிமை வாங்குபவருக்கு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தை விற்பனை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
வீட்டின் மீது எந்த வில்லங்கமும் இல்லை:
வீட்டை விற்பவர் வீட்டின் உரிமையாளர் என்பதையும், விற்கப்படும் வீடு எந்தவிதமான வில்லங்கத்திலும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தும் அளவுக்கு வில்லங்கச் சான்றிதழை வாங்குபவருக்கு பெற்று தருவது விற்பவரின் கடமையாகும். வீடு விற்பனையாகும் தேதி வரை வீட்டின் மீது இருக்கும் அனைத்து கடன்கள், பொறுப்புகள், அதற்குரிய வரிகள், கட்டணங்கள் ஆகிய அனைத்திற்குமே விற்பனையாளர் தான் பொறுப்பு; வீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டை வாங்குபவரின் பெயருக்கு மாற்றிய பிறகுதான் வீட்டிற்கு மீது செலுத்தப்படக்கூடிய கட்டணங்கள் வரிகள் ஆகியவை வாங்குபவரின் பொறுப்பாக மாறுமென்பதை விற்பனை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
வீடு குடும்பத்தின் ஒரு பொது சொத்தாக இருந்தால், அது விற்பவரின் பங்கு என்பதை உறுதி செய்வது விற்பவரின் பொறுப்பு.
ஒருவேளை வீட்டை வாங்கிய பிறகு வாங்கியதற்கு முன்னர், வீட்டின் மீது வில்லங்கமாக ஏதேனும் விஷயங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டால் அதற்கு விற்பவர் தான் பொறுப்பு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
வீடு சம்மந்தப்பட்ட அனைத்து பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள்:
வீட்டை பற்றிய விவரங்கள் தெரிவித்தால் மட்டும் போதாது, அது சம்பந்தமான அனைத்து ஆவணங்கள், பதிவுகள் மற்றும் சான்றிதழ்களையும் வாங்குபவருக்கு, விற்பவர் வழங்க வேண்டும். குறிப்பாக வீட்டை பற்றி அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து ஆவணங்களின் நகல்களையும் முதலிலேயே வாங்குபவருக்கும் விற்பவர் வழங்க வேண்டும். இதை தவிர்த்து, விற்பனை ஒப்பந்தம் மட்டுமல்லாது, சொத்து பரிமாற்ற ஒப்பந்தம், வீட்டுக்கு சம்பந்தப்பட்ட வரிகள் உள்ளிட்ட ஆவணங்கள் என்று அனைத்து ஆவணங்களையும் அரசாங்கம் வழங்கிய சான்றிதழ்களையும் வாங்குபவரிடம் ஒப்படைக்க வேண்டும்.