அறிவியல் வேட்கை உள்ள மாணவர்களின் இலக்கு, இஸ்ரோ, நாசா ஆகியவைதான். இஸ்ரோ, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகும்.
மாணவர்களை பெரிதும் ஈர்க்கும் விண்வெளி மையம் விண்வெளி ஆராய்ச்சிகள் சார்ந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சியை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்தராகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய தொலை உணர்வு ஆய்வு நிறுவனத்தின் (ஐஐஆர்எஸ்) சார்பில் வானவியல், வானியல் இயற்பியல், அண்டவியல் போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த இலவச ஆன்லைன் வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. நாள்தோறும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.
ஆங்கில வழியிலேயே இந்த வகுப்புகள் நடைபெறும், வகுப்புகள் நடைபெற உள்ள தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்பவர்கள் படிப்பு சார்ந்து எழும் சந்தேகங்களை வல்லுநர்களிடம் எழுப்பி பதில்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆன்லைன் வகுப்பில் கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாமல், பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்.
இத்துறைக்கு தொடர்பில்லாத மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த ஆன்லைன் வகுப்பில் சேர விண்ணப்பக் கட்டணமோ, பயிற்சிக் கட்டணமோ கிடையாது.
அறிவியல், விண்வெளி, ஆராய்ச்சி கனவுகளுடன் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.