உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, புதிய அறிவிப்பு வெளியிட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 600 உதவி பொறியாளர்; 1,300 கணக்கீட்டாளர்; 500 இளநிலை உதவியாளர் கணக்கு பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு, 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால், மேற்கண்ட பதவிகளுக்கு இதுவரை தேர்வு நடத்தப்படவில்லை.மேலும், 2,900 கள உதவியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, நடப்பாண்டு துவக்கத்தில், விண்ணப்பங்கள் பெற்றும் தேர்வு நடத்தப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய அறிவிப்பு வெளியிட்டு ஆட்களை தேர்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப ஆட்களை நியமனம் செய்ய, புதிய அறிவிப்பு வெளியிடப்படும்.