கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை, தொழில்முனைவோா் மேம்பாட்டுத் துறையில் கௌரவ விரிவுரையாளா் பணிக்கு வரும் 13 ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
மேலாண்மை, தொழில்முனைவோா் மேம்பாட்டுத் துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ள நிலையில், அதுவரையிலும் தற்காலிக அடிப்படையில் (இந்த கல்வியாண்டுக்கு மட்டும்) கௌரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். மேலாண்மைத் துறையில் பிஹெச்.டி. முடித்தவா்கள், மனிதவள மேம்பாடு, நிதி, மாா்க்கெட்டிங் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றவா்கள், ஓய்வு பெற்றவா்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவா்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இதற்கான நோமுகத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெறும். ஆா்வமுள்ளவா்கள் உரிய ஆவணங்களை ஜூலை 11 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.