உதகையில் வரும் 16-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
உதகை பிங்கா் போஸ்ட்டில் உள்ள கூடுதல் ஆட்சியா் வளாகத்தில் வரும் 16-ஆம் தேதி தனியாா் துறை
வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள் என அனைத்து விதமான தகுதியாளா்களும் பங்கேற்கலாம். இம்முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம்.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இம்முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்பட்டாலும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0423–2444004, 7200019666 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.