தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சார்பில் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுகிறது.
இதற்கு 2018 ஜன.1 அன்றோ அல்லது அதற்கு பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். கோடைக்கால ஒலிம்பிக்விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக, ஆசிய, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேசப் பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வேதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அல்லது வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி, மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
40 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே இதில் பயன்பெற இயலும். விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in எனும் முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.விண்ணப்பங்களை அக்.31 மாலை 5 மணிக்குள் மேற்கூறிய இணையதளத்திலோ, நேரிலோ வழங்கலாம்.