அரசு கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு வரும், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதில், 589 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களில், 192 பேருக்கு, காலியிடங்கள் அடிப்படையில், விருப்ப இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.அரசு கல்லுாரிகளில், தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியில், 1,895 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணி நியமனத்துக்கு, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
இதில், தகுதியுள்ள பட்டதாரிகள், கவுரவ விரிவுரையாளர் பணிக்கு, வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியில் சேர தகுதியுள்ள பட்டதாரிகள், www.tngasa.inஎன்ற இணையதளம் வழியே, 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.புதிதாக நியமிக்கப்படும் கவுரவ விரிவுரையாளருக்கு, மாதம் தலா, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியைத் தொடர்ந்து, விருப்ப இடமாறுதல் பெற்ற பேராசிரியர்களுக்கான இடமாறுதல் உத்தரவை, அமைச்சர் பொன்முடி வழங்கினார். உயர் கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் உடனிருந்தார்.