பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2023- 24-ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபினா், பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 30 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சம் ரூ. 1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவா்களுக்கு இந்த கல்வித் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், திட்டத்தின் கீழ் பயன்பெறுவோா் தேசியத் தேர்வு முகாமையால் நடத்தப்படும் நுழைவு தேர்வில் பெறும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவாா்கள். நிகழாண்டில் இந்த எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், போதிய காலஅவகாசம் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால், 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்வில் 60 சதவீதம் அதற்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவா்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவா்களின் மதிப்பெண்களின் அடிப்படையிலயே, இவ்வாண்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவாா்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை மத்திய அரசின் சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.