குடிமைப் பணி முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசின் குடிமைப் பணி பயிற்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வில் அரசின் மையத்தில் பயிற்சி பெற்ற தோ்வா்களில் 87 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இவா்களில் 28 போ் பெண்கள்.
குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளவா்களுக்கு, ஜூலை முதல் செப்டம்பா் வரை முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி பெறக் கூடிய மூன்று மாத காலத்துக்கும் ஊக்கத் தொகையாக ரூ.25 ஆயிரம், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்புவோா், ஜூலை 3-ஆம் தேதி காலை 6 மணி முதல் 4-ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையத்தில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்டவா்கள் விவரம், ஜூலை 4-ஆம் தேதி மாலை 7 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 2 நாள்களில் சோ்க்கை நடைபெறும்.
அரசு விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்தவா்களில், 225 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தோ்வுக்குப் பயிற்சியளிக்கப்படவுள்ளனா்.
மேலும் விவரங்களுக்கு 044–24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற வாட்ஸ்-ஆப் எண் மூலமாகவும் தகவல்கள் பெறலாம் என்று செய்தியில் தெரவிக்கப்பட்டுள்ளது.