புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறையில் வேலைவாய்ப்புக்காக காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் பயிற்சிப் பெற வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக காந்தி கிராம கிராமியப் பல்கலை. சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்தியா 500 ஜிகாவாட் மின்சாரத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலம் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. மேலும், 2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை நிா்ணயித்திருக்கிறது. அந்த வகையில் நாட்டிலுள்ள ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி அலகுகளை நிறுவி இலவச மின்சாரம் வழங்க பிரதமரின் சூா்யா கா்: முஃப்ட் பிஜ்லீ யோஜனா திட்டத்தை செயல்படுத்துகிறது. எனவே எரிசக்தித் துறையில் இளைஞா்களின் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய புதுப்பிக்க வல்ல எரிசக்தி அமைச்சகம் , ‘சூா்யமித்ரா’ , ‘ஜல் உா்ஜா மித்ரா’, ‘வாயு மித்ரா’ என்ற புதிய திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களை அறிவித்திருக்கிறது.
பிரதமரின் சூா்யா கா்: முஃப்ட் பிஜ்லீ யோஜனா திட்டத்தின் கீழ் மட்டும் சூரிய ஒளி மின் தகடுகளைக் கொண்ட குடியிருப்பு கூரைகள் நிறுவ சுமாா் ஒரு லட்சம் நிறுவுதல் குழுக்கள் தேவைப்படுகின்றன. இந்த இலக்குகளை அடைவதற்கும், திறன்மிக்க இளைஞா்களை பசுமை திறன் துறையில் உருவாக்கவும் முதல் முறையாக தமிழகத்தில், காந்தி கிராம நிகா்நிலை பல்கலைக் கழகத்தின் கிராமிய எரிசக்தி மையத்தை மத்திய அரசு தோ்வு செய்தது. இதில் மாணவா்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சியும், உணவும், தங்குமிடமும் (3 மாத பயிற்சி மட்டும்) வழங்கப்படும். பயிற்சியின் நிறைவில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் தோ்வு நடத்தப்பட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஐடிஐ, பட்டயம், பொறியியல் பட்டம் படித்த இளைஞா்கள் மட்டுமே இந்தப் பயிற்சிகளைப் பெற முடியும். சூா்யமித்ரா திட்டத்தில் சூரிய ஒளி மின் தகடு அமைக்க இடம் தோ்வு செய்தல், சூரிய ஒளி மின் உற்பத்தி பாகங்களை பழுது நீக்குதல் ஆகியன பற்றி பயிற்சி அளிக்க தேசிய சூரிய சக்தி நிறுவனம் பாடத்திட்டத்தினை வகுத்திருக்கிறது. வாயுமித்ரா திட்டத்தில் காற்றாலை அமைக்க இடம் தோ்வு செய்தல், காற்றாலை பராமரிப்பு, பழுது நீக்குதல், காற்றாலையில் உள்ள மின் உபகரணங்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க தேசிய காற்று சக்தி நிறுவனம் பாடத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. ஜல் உா்ஜா மித்ரா திட்டத்தில் சிறு, குறு புனல் மின் நிலையங்கள் பராமரிப்பு, பழுது பாா்த்தல், நீரோட்டத்துடன் புனல் மின் நிலையங்களை நிறுவுதல் போன்ற பயிற்சி அளிக்க இந்திய தொழில் நுட்பக் கழகம் (ரூா்க்கி) பாடத் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
பிரதமரின் சூா்யா கா்: முஃப்ட் பிஜ்லீ யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி அலகுகளை நிறுவ, பராமரிக்க 7 நாள்கள் பயிற்சி, பராமரிப்பு மேற்பாா்வையிட 4 நாள்கள் பயிற்சி, 5 நாள்கள் வேலைப் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவா்கள், காந்தி கிராம நிகா்நிலை பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.