மனைப் பிரிவு அனுமதி, சொத்துவரி கணக்கீடு, வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்லைனில் பெறப்பட்ட நிலப் பதிவேடு நகல்களில் வருவாய் துறையினரின் சான்றொப்பத்தை கேட்க கூடாது என்று நிலஅளவை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
கட்டிடம், மனைப் பிரிவு அனுமதி, சொத்து வரி கணக்கீடு, வீடு,நிலம் தொடர்பான கடன் பெறுவதற்கு விண்ணப்பத்துடன், சம்பந்தப்பட்ட நிலப் பதிவேடு தொடர்பான சான்றுகள் வழங்கப்பட வேண்டும். சமீபகாலமாக நிலப் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு கணினிவழியாக சான்றுகள் பெறப்படுகின்றன.
இவ்வாறு பெறப்படும் சான்றுகளுடன் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் வழங்கும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிலப் பதிவேடுகளில் உரிய அதிகாரிகளின் சான்றொப்பம் கோருகின்றனர்.
இந்த நிலையில், டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய நிலப் பதிவேடுகளை சரிபார்க்கும் வசதிகள் இருப்பதால் சான்றொப்பம் பெறுவதை தவிர்க்குமாறு நில அளவை, நிலவரி திட்ட ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநரகம் ஆகியவற்றுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 313 தாலுகாக்களில் 311-ல் உள்ள நகர்ப்புற,ஊரகப் பகுதிகளின் நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு, தமிழ்நிலம் ஊரகம் மற்றும் நகர்ப்புற மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நத்தம் நிலப் பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
பதிவிறக்கும் செய்யும் வசதி: மேலும், 137 நகரங்களில் உள்ளஅனைத்து 55.02 லட்சம் களஅளவை வரைபடங்கள் குறிப்பாக,நகர வரைபடங்கள், வட்ட வரைபடங்கள் ஆன்லைன் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அ-பதிவேடு,சிட்டா, ஓஎப்எம்எஸ், வட்ட வரைபடங்கள் என அனைத்தும் டிஜிட்டல் கையொப்பத்துடன் https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. இவற்றை இலவசமாக பார்வையிடவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி செய்யப் பட்டுள்ளது.
கட்டிடம், மனைப் பிரிவு அனுமதி, கட்டிட உரிமங்கள், சொத்து வரிநிர்ணயம் செய்தல், வீட்டுக் கடன்,விவசாயக் கடன் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்லைனில் கிடைக்கும் இந்த நிலப் பதிவேடுகள் முக்கியமான இணைப்பு ஆவணங்களாக உள்ளன.
இந்த நிலையில், கட்டிடம், மனைப் பிரிவு அனுமதிக்காக மக்கள் விண்ணப்பிக்கும்போது, நிலப் பதிவேடு நகல்களை ஆன்லைனில் எடுத்து சமர்ப்பித்தால், அதில் தாசில்தார் அல்லது நில அளவைத் துறை அதிகாரிகளிடம் இருந்து சான்றொப்பம் பெற்று அளிக்க வேண்டும் என்று, அனுமதி அளிக்கும் அதிகாரிகள் கேட்கின்றனர்.
டிஜிட்டல் கையொப்பம் வழங்கப்பட்டது, க்யூ ஆர் கோடு உள்ளநில ஆவணங்கள் அதாவது அ-பதிவேடு மற்றும் பட்டா ஆகியவை சட்டப்பூர்வமாக செல்லத்தக்க நில ஆவணங்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைனில் வழங்கப்படும் நில ஆவணங்களை கைபேசியில் உள்ள க்யூ ஆர் கோடு ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம் என்பதால், சான்றொப்பம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சான்றொப்பம் பெறுவதை தவிர்க்குமாறும், உரிய தகவல்களை இணையதளத்தில் உள்ளீடு செய்து, சான்றுகளை சரிபார்த்துக் கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் இந்த கடிதத்தை, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து, இந்த அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நில ஆவணங்களை கைபேசியில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம் என்பதால், சான்றொப்பம் தேவையில்லை.