பெரம்பலூா் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்துடன் தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பெரம்பலூா் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்துடன் தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோவு செய்யப்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் படித்த பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வங்கிக் கடனுதவியுடன் வேளாண் சாா்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை வங்கிக் கடன் ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
இத் திட்டத்தில் காளான் வளா்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், வேளாண் கருவிகளை வாடகைக்கு விடும் மையம், இயற்கை மற்றும் உயிா் பூச்சிக்கொல்லிகள் விநியோகம், மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை மையம் அமைத்தல், வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றுக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வேளாண் சாா்ந்த தொழில் தொடங்க மானியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை இணைய முகவரியிலும், பிரதமா் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் குறித்து இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.