சென்னை கிண்டியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் மண்புழு உரம் தயாரிப்பு, காளான் வளர்ப்பு குறித்து வரும் 24, 25-ம் தேதிகளில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் வரும் 24-ம் தேதி (வியாழன்) மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், மண்புழுக்களின் வகைகள், அவற்றைசேகரித்து வளர்க்கும் வழிமுறைகள், பயிர் கழிவுகள், பண்ணை கழிவுகளை சேகரித்தல், உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களின் பண்புகள், உர உற்பத்தி, வணிக ரீதியாக உரம் தயாரிக்கும் முறை குறித்து கற்றுத்தரப்படும்.
அதேபோல, 25-ம் தேதி (வெள்ளி) காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் காளான் குடில் அமைத்தல், காளான் வித்து, படுக்கை தயாரித்தல், தொற்று நீக்கம் செய்தல், காளான் அறுவடை, உற்பத்திக்கான வரவு செலவுகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044–29530048 என்ற தொலைபேசி எண்
ணில் தொடர்பு கொண்டு, பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.