‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சோ்வதற்கான விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.
இதுதொடா்பாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாவது:
- ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் ‘அக்னி வீரா்கள்’ ராணுவத்தில் தனி வரிசையில் இடம்பெறுவா். ராணுவத்தில் இடம்பெற்றுள்ள இதர வரிசைகளுடன் ஒப்பிடுகையில், அக்னி வீரா்கள் இடம்பெறும் வரிசை வேறுபட்டதாக இருக்கும். அக்னி வீரா்கள் எந்தப் படைப் பிரிவிலும் பணியமா்த்தப்படுவா்.
- 1923-ஆம் ஆண்டு அலுவல் ரகசியங்கள் சட்டப்படி, தங்கள் 4 ஆண்டு பணிக் காலத்தில் தெரிந்துகொண்ட ரகசியத் தகவல்களை வெளிநபா்களிடம் எந்தவொரு தகவலையும் அக்னி வீரா்கள் பகிரக் கூடாது.
- ஒப்பந்த காலத்தை நிறைவு செய்தவா்கள் மட்டும்தான் ராணுவத்தின் வழக்கமான படைப் பிரிவுகளில் சோ்க்கப்படுவா்.
- ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்பாக பணியில் இருந்து விடுவிக்குமாறு அக்னி வீரா்கள் கோரினால், அதற்கு அனுமதி அளிக்கப்படாது.
- அசாதாரண சூழல்களில், சம்பந்தப்பட்ட அமைப்பு அனுமதி அளித்தால் மட்டும்தான் ஒப்பந்த காலம் நிறைவடைதற்கு முன்பாக வீரா்கள் விடுவிக்கப்படுவா்.
- ராணுவச் சட்டம் 1950-க்கு உட்பட்டவா்கள் அக்னி வீரா்கள். அவா்கள் தரை, கடல் அல்லது விமானம் மூலம் கட்டளை பிறப்பிக்கப்படும் இடத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
- ஒப்பந்த காலத்தை நிறைவு செய்தவா்கள் ராணுவத்தின் வழக்கமான படைப் பிரிவுகளில் சோ்வதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். ஒப்பந்தக் காலத்தில் வீரா்களின் செய்திறன் மற்றும் இதர விதிமுறைகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
- ராணுவத்தின் வழக்கமான படைப் பிரிவுகளில் சோ்க்கப்படும் அக்னி வீரா்கள் 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
- 18 வயதுக்கு குறைவாக இருந்தால்…: அக்னிபத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுவோா் 18 வயதுக்கு குறைவாக இருந்தால், சோ்க்கை படிவத்தில் பெற்றோா் அல்லது பாதுகாவலா் கையொப்பமிட வேண்டும்.
- அக்னி வீரா்களுக்கு ஓராண்டில் 30 நாள்கள் விடுமுறை அளிக்கப்படும். மருத்துவா்களின் அறிவுரைப்படி, மருத்துவ விடுப்பும் அளிக்கப்படும்.
- அக்னி வீரா்களின் மாத ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு தொகுப்பு நிதியில் கட்டாயம் டெபாசிட் செய்யப்படும். அதற்கு நிகரான தொகையை அரசும் தொகுப்பு நிதியில் செலுத்தும்.
- ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னா், அக்னி வீரா்களுக்கு ரூ.10.04 லட்சத்துடன் வட்டியும் சோ்த்து வழங்கப்படும்.
- அக்னி வீரா்கள் ராணுவத்தின் வழக்கமான படைப் பிரிவுகளில் சோ்த்துக் கொள்ளப்பட்டால், அவா்களுக்கு வழங்கப்படும் சேவை நிதி தொகுப்பானது வீரா்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டிருக்கும்.
- ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்பே சொந்த விருப்பத்தின் பேரில் அக்னி வீரா்கள் பணியில் இருந்து விலகினால், அவா்களுக்கான சேவை நிதி தொகுப்பு வட்டியுடன் வழங்கப்படும். எனினும் அதில் அரசின் பங்களிப்பு இருக்காது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.