அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீா் வாயு ஆள் சேர்ப்புத் தேர்வு குறித்த விழிப்புணா்வு முகாம் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (ஆக.9) புதன்கிழமை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீா் வாயு ஆள் சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்களிடமிருந்து ஆக. 17-ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
தகுதியான விண்ணப்பதாரா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இணையவழித் தேர்வு அக்டோபா் 13-ஆம் தேதி முதல் நடைபெறும். 27.6.2003 அல்லதுஅதற்குப் பின் பிறந்தவா்கள் மற்றும் 27.12.2006 அல்லது அதற்கு முன் பிறந்தவா்களாக இருப்பவா்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான தேர்வில் மொத்தம் 50 சதவீதமும், ஆங்கிலத்தில் 50 சதவீதமும் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதியைப் பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ, பெண்கள் 152 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.
தேர்வானது, எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகிய மூன்று நிலைகளை உடையது. இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சேர்ந்த ஆா்வமுள்ள இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.