ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு எதிா்வரும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் தொடா்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரை உயா்த்தும் வகையில் மானியங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளா்த்துக் கொள்ள பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு நபருக்கு ரூ.1,500 வீதம் ரூ.11 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன் பயிற்சி: மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை, வேளாண்மைப் பணியில் பயன்படுத்தி வருகிறாா்கள். இதைத் தொடா்ந்து பயிற்சி பெற்ற விவசாயிகள் தாட்கோ மானியத்துடன் ட்ரோன்கள் வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கலாம் என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை தீா்மானித்துள்ளது.
ஒரு ட்ரோனின் விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விற்கப்படுகிறது. இதில், ட்ரோனின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையில் மானியம் அளிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் போது வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.