TNPSC குரூப் 2 வில் ‘ஜெய்ஹிந்த்’ என எழுதியது தப்பில்லை உயர்நீதிமன்ற
‘டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ‘குரூப் – 2’ தேர்வு கட்டுரை பகுதியின் இறுதியில் ‘ஜெய்ஹிந்த் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம்’ என எழுதியதால், விடைத்தாள் செல்லாது என அறிவித்தது சட்ட விரோதம்; மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்க வேண்டும்’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் கல்பனா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 2014ல் நடந்த ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் குரூப் -2 முதன்மை தேர்வில், இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து விரிவாக எழுதவும் என்ற கேள்விக்கு பதில் எழுதினேன்.
முடிவில், ‘ஜெய்ஹிந்த் – இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்’ என எழுதி முடித்திருந்தேன்.
இது, கேள்விக்கு பொருத்தமானது. ஆனால், மதிப்பீடு செய்யாமல் நிராகரித்தது சட்டத்திற்குப் புறம்பானது. விடைத்தாளை மதிப்பீடு செய்து மதிப்பெண், பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அந்த மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், ‘ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கட்டுரை முடிவில் மனுதாரர் எழுதியுள்ளார்; விதிகளை மீறியுள்ளார். மனுதாரரின் விடைத்தாள் செல்லாது’ என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கட்டுரையில், ‘ஜெய்ஹிந்த் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம்,’ என எழுதியது கேள்விக்கு பொருத்தமானது என்கிறார் மனுதாரர். இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த கட்டுரையின் இறுதியில் ‘ஜெய்ஹிந்த் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம்’ என மனுதாரர் எழுதியிருப்பது கேள்விக்கு மிக பொருத்தமானது. அதை கவனக்குறைவாக எழுதியதாக கருத முடியாது.
‘ஜெய்ஹிந்த்’ அல்லது ‘இந்தியாவிற்கு வெற்றி’ என்பது இந்தியாவில் பொதுவாக உச்சரிக்கப்படும் முழக்கம். அது, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தின் முடிவில் குழந்தைகளால் அல்லது முக்கிய நபர்களின் பேச்சின் முடிவில் உச்சரிக்கப்படுகிறது.
தாய்நாட்டின் மீது, அதாவது இந்தியா மீது தேசபக்தியை துாண்டும் வகையில் இது முழங்கப்படுகிறது.
‘ஜெய்ஹிந்த் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம்’ என எழுதியது இயல்பான மற்றும் பயனுள்ளதாக தோன்றுகிறது. மனுதாரரின் பகுதி – பி விடைத்தாளை செல்லாததாக அறிவித்திருக்கக் கூடாது. அவ்வாறு செய்தது சட்ட விரோதம். மனு அனுமதிக்கப்படுகிறது.
முதன்மை தேர்வு கட்டுரை – பி பகுதிக்குரிய விடைத்தாளை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்க வேண்டும். ஏ மற்றும் பி பகுதிக்குரிய மதிப்பெண் அடிப்படையில், மனுதாரர் போதிய மதிப்பெண்களை பெற்றிருந்தால், அவரை பணி நியமனம் செய்ய டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow