டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிந்து 4 நாட்கள் கடந்த நிலையிலும் இன்று (செப்டம்பர் 5) வரை விடைத்தாளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடவில்லை. இது தேர்வர்களை ஆச்சர்யத்திலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தை இதற்காக துளாவி வருகிறார்கள்.
இந்த தாமதம் குறித்து டி.என்.பி.எஸ்.சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘கடந்த மார்ச் 3-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு மறுநாளே விடைத்தாளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிட்டது நிஜம்தான். ஆனால் அதுவே பின்னர் பெரும் பிரச்னை ஆனது.
தேர்வில் வெற்றி பெறாதவர்கள், பின்னர் இதையும் ஒரு காரணமாக குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்தத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குவது, சரியான விடைகளை வெளியிடாதது ஆகியவை தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
எனவே இந்த முறை சரியான விடைத்தாளை வெளியிடவும், தவறான கேள்விகளுக்கு உரிய நிவாரண மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் தொடக்கத்திலேயே தீர்க்கமான முடிவை எடுக்க ஆணையம் விரும்புகிறது. அதனால்தான் உரிய அவகாசம் எடுத்துக் கொண்டிருக்கிறது. விடைத்தாள் தயார் செய்யும் பணி முடிந்துவிட்டாலும், அதை சரி பார்க்கும் பணி நடக்கிறது. எந்த நேரமும் அது வெளியாகலாம்’ என்றார்கள் அவர்கள்.
13 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் எதிர்பார்ப்பு இது.