செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இப்போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 31.05.2023 முதல் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் ( Tamil Nadu Uniformed Services Recruitment Board ) உதவி ஆய்வாளர் பணிக்காலியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்த பணிக்காலியிடங்கள் 615 ஆகும். மேலும் ஜூன் மாத இறுதியில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. உதவி ஆய்வாளர் பணிக்காலியிடங்களுக்கு கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆன்லைனில் வாயிலாக விண்ணப்பிக்க துவங்கும் நாள் 01.06.2023, விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும். இப்போட்டித்தேர்வுக்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு 01.07.2023 அன்றைய தேதியில் பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க www.tnusrb.tn.gov.in இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போட்டித்தேர்வுக்கான உடற்தகுதி உயரம் பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ஆண்கள் 170 செ.மீ, பெண்கள் 159 செ.மீ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆண்கள் 167 செ.மீ மற்றும் பெண்கள் 157 செ.மீ இருக்க வேண்டும்.
இலவச பயிற்சி வகுப்புகள்
எனவே, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இப்போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 31.05.2023 முதல் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மேற்காணும் கல்வித்தகுதி, வயது வரம்பு, உடற்தகுதி உடையவர்கள் மற்றும் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்யுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.