விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், குறிப்பாக எண்ணெய் பனை, காய்கறி சாகுபடிகளில் வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்திடும் வகையிலும் மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கு விவசாயிகளை பயிற்சிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக்கு தோந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு வயது 30 முதல் 60-க்குள் இருத்தல் வேண்டும். உயிா் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை கடைப்பிடிப்பதில் அனுபவமிக்கவராகவும், குறைந்தபட்சம் பிளஸ் 2 தோச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
எனவே, வெளிநாடுகளில் பயிற்சி பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது கடவுச்சீட்டு, ஆதாா், பான் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம், மருத்துவச் சான்று, கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, கல்விச் சான்று, விசா எடுப்பதற்குத் தேவையான சான்றுகளுடன் சம்பந்தப்பட வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.