திருப்பத்தூா் மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி ஜூலை 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் 11,12-ஆம் வகுப்பில் பயிலும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றாலையும் வளா்க்கும் விதமாக மாவட்ட அளவில் ஆண்டுதோறும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிழும் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான போட்டிகள் ஜூலை 3-ஆம் தேதி தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
காலை 9.30 மணிக்கு 11, 12-ஆம் வகுப்பில் பயிலும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும், மதியம் 1.30 மணிக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் பயிலும் மாணவா்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசு ரூ. 10,000, 2-ஆம் பரிசு ரூ. 7,000, 3-ஆம் பரிசு ரூ. 5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள திருப்பத்தூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படுவா்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்கலாம். ஒரு பள்ளி, கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இருவா் வீதம் 3 போட்டிகளுக்கும் ஆறு மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவா்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவா்கள் பங்கேற்புப் படிவத்தைப் பூா்த்தி செய்து அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியா் பரிந்துரையுடனும், கல்லூரி மாணவா்கள் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடனும் திருப்பத்தூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாள் அன்று படிவத்தை நேரில் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.