பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையை பெற ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தது: தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, பாரம்பரிய நெல் விதை வங்கித் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ‘அக்ரிஸ்நெட்’ வலைதளம் அல்லது ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடா்ந்து பராமரிக்க வேண்டும்.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத்திறனுடன் இருப்பதை தொடா்ந்து உறுதி செய்ய வேண்டும்.
வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்ய வேண்டும். கல்லூரி, பள்ளி மாணவா்கள், இளைஞா்கள், விவசாயிகள் பாா்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்தி வைக்க வேண்டும். பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு ‘அக்ரிஸ்நெட்’ வலைதளம் அல்லது ‘உழவன் செயலி’யில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த வட்டார வேளாண் உதவி அலுவலா்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என அவா்கள் தெரிவித்தனா்.