கல்வி போல் செல்வம் ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட கல்வியை இயலாதவர்களுக்கு சாத்தியமாக்குகிறது கல்விக் கடன்கள். இதனால் அவர்கள் விரும்பும் படிப்புகளை அவர்களின் கனவு கல்லூரிகளில் தொடர முடிகிறது. இருப்பினும், வட்டி விகிதம், கடன் திரும்ப செலுத்தும் காலம் என பல காரணிகள் இதில் உள்ளது. எனவே, அதிகப்படியான செலவினங்களைத் தவிர்க்க கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பின்வருபவற்றை கவனமாக ஆராய்ந்து கொள்ளுங்கள்.
என்னென்ன தகுதிகள் தேவைப்படுகிறது
கல்விக் கடன்களை வழங்கும் வங்கிகள் வெவ்வேறு தகுதி அளவுகோல்களைக் கொண்டுள்ளனர். சில நிதி நிறுவனங்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு மட்டுமே கல்விக் கடன்களை வழங்குகின்றன. மற்றவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் படிக்க கடன்களை வழங்குகின்றன. சில சமயங்களில், பெற்றோர் அல்லது அதற்கு இணையான உறவுகளின் உத்தரவாதமும் கல்வி கடன்களுக்கு வங்கிகளால் கோரப்படுகிறது. குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டுமே தற்போது கல்வி கடன்கள் வங்கிகளால் வழங்கப்படுகிறது.
கல்வி கடன்களுக்கான வட்டி விகிதங்கள்
கல்வி கடன்களை எளிதில் வாங்கி விடலாம். ஆனால், படிப்பு முடிந்த பிறகு மாணவர்கள் மீது ஏற்றும் சுமையாக இதன் வட்டி விகிதங்களும், பிராசஸிங் கட்டணங்களும் இருக்கின்றன. மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு வங்கிகளின் வட்டி விகிதங்களும் மாறுபடுகின்றன. மேலும், கடன் மதிப்பீடு, பிணை போன்ற பல்வேறு காரணங்கள் வட்டி விகிதங்களைப் பாதிக்கின்றன. எனவே, மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன்களுக்காக விண்ணப்பிக்கும் முன், தங்கள் CIBIL மதிப்பீட்டை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கல்விக் கடனைத் திரும்ப செலுத்தும் முறைகள்
கடனைத் திரும்பச் செலுத்தும் முறையில் ஒவ்வொரு வங்கிகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. தற்போது இரு வகைகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது வட்டியுடன் பணத்தை திரும்பச் செலுத்தும் திட்டம், மற்றொன்று வட்டி இல்லாமல் அசல் பணத்தை திரும்பச் செலுத்தும் திட்டம்.
வங்கிகள் முதலாவதாக வெளியிட்ட தொகையின் வட்டியை கட்டுவது முதல் முறையாகும். கல்விக் கடனின் மொத்தத் தொகைக்கான வட்டியுடன் சேர்ந்த மாதத் தவணையை படிப்பு முடிந்த பிறகு செலுத்தத் தொடங்கினால் போதும்.
இரண்டாவதாக, படிப்பு முடிந்து ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டு கழித்து மாதத் தவணையைத் செலுத்தத் தொடங்குவது. அதாவது தற்காலிகமாக போக்குவரத்து முடக்கப்படும் (Moratorium) கணக்குகளுக்கு இது பொருந்தும். இந்த வகையில் கடன் எடுக்கவில்லை என்றால் கடன் பெற்ற அடுத்த மாதத்தில் இருந்தே வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
வரி விலக்கு
குறிப்பாக கடன் பெறுபவருக்கு இதிலிருந்து வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது, மாணவரின் தந்தை இந்த கடன்களுக்கான வட்டி செலுத்தி வந்தால், அவரது வருமான வரியில் இருந்து இந்த தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.