தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான (Artificial Intelligence) ஆராய்ச்சி படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கான முழு விவரம், தேவையான தகுதிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
AI உதவித்தொகை: தமிழகத்தில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான சிறந்த பல்கலைக்கழகமாக ராபர்ட் போஷ் சென்டர் ஃபார் டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இயங்கி வரும் இந்த ஆர்.பி.சி.டி.எஸ்.ஏ.ஐ கல்வி நிறுவனத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மாணவர்களின் கனவாக இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த ராபர்ட் போஷ் மையத்தில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாராயணன் குடும்ப அறக்கட்டளையுடன் இணைந்து மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி உதவித்தொகை பெறுபவர்களை தேர்வு வைத்து தேர்ந்தெடுத்த பின்னர், அவர்கள் அனுபவத்தை பொறுத்து ஆண்டுதோறும் 15 லட்சம் முதல் 18 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றுபவர்களின் சம்பளத்திற்கு சமம் என்பது கூடுதல் தகவல்.
இது தவிர மாணவர்களுக்கு ஒரு முறை ஆராய்ச்சி தொகையாக 30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதன்படி பிஎச்.டி ஆராய்ச்சி படிப்பை முடித்த பட்டதாரிகள், கணினி அறிவியல், கணக்கீட்டு மற்றும் தரவு அறிவியல், உயிரியல் மருத்துவ அறிவியல், மேலாண்மை, நிதி மற்றும் பிற பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://rbcdsai.iitm.ac.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.