பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வாயிலாகத் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே நடைபெற்ற அண்ணாப் பல்கலைக் கழகத் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்றும், மதிப்பெண்கள் முறையாக வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ”அண்ணா பல்கலைக் கழகத்தில் பருவத் தேர்வுகள் முறையாக நடைபெறவில்லை. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வில் 25 சதவிகித மாணவர்களே தேர்ச்சி அடைந்தனர்.
இதனால் மீண்டும் ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்படவுள்ளது.
இதனால் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
தேர்ச்சி பெற்ற மதிப்பெண் குறைவு என்று கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். மீண்டும் தேர்வு எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அந்த மதிப்பெண் தான் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
ஆன்லைன் தேர்வு நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
- நடந்து முடிந்த அண்ணா பல்கலை. பருவத்தேர்வில் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.
- பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேரு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததால் மறு தேர்வு நடைபெறுகிறது.
- இந்த தேர்வுக்கு மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை – தேர்வு எழுதுவது அவரவர் விருப்பம்.
- பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் மதிப்பெண் குறைந்ததாக எண்ணினால் அவர்கள் தேர்வு எழுதலாம்.
- மறுதேர்வு ஆன்லைனில் 3 மணி நேரம் நடைபெறும். பழைய வினாத்தாள் முறையிலையே தேர்வு இருக்கும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.