தொலைதூர கல்வி மூலம் மீன்வளம் குறித்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி மூலம் நன்னீர் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டிய மீன் பொருட்கள் தயாரிப்பு குறித்த 6 மாத கால சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட உள்ளது. நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு படிபபு தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் தஞ்சையிலும், அலங்கார மீன்வளர்ப்பு பற்றிய சான்றிதழ் படிப்பு மாதவரம் மற்றும் பவானிசாகரிலும், மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு படிப்பு தலைஞாயிறு, தூத்துக்குடி, பொன்னேரியிலும் நடத்தப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை https://www.tnjfu.ac.in/directorates/othersdir/doe/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி ஆகும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்து இருத்தல் வேண்டும்.
இந்த படிப்புக்கான பயிற்சி கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும். விருப்பம் உள்ளவர்கள் பயிற்சிக்கான கட்டணத்தை The DEE, TNJFU, Nagapattinam என்ற பெயரில் ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் எடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், வங்கி வரைவோலை (அசல்), 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (நகல்), ஆதார் அட்டை (நகல்) மற்றும் சமீபத்திய புகைப்படம் ஒன்றுடன் சேர்க்கப்பட்டு மொத்த ஆவணங்களுடன் விரிவாக்க கல்வி இயக்குனர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், வெட்டாறு நதிக்கரை வளாகம், நாகப்பட்டினம்-611 002 என்ற முகவரிக்கு 14.05.21 அன்று மாலை 5.45 மணிக்கு முன்பு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்புதல் வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.