கொரோனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மே 2-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது.
அதனைத்தொடர்ந்து அடுத்த நாளே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்ததால் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் பங்கேற்பதன் காரணமாக மே 3 -ம் தேதி நடைபெறும் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் பொதுத்தேர்வை சில நாட்கள் தள்ளி வைக்க பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, மே 3-ம் தேதி நடைபெற இருந்த முதலாவது (மொழிப்பாடம்) தேர்வு மே 31-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் அதிகரித்ததன் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு நிலவரம் உச்சத்தில் இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது.
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உறுதியாக தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார். இந்தநிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரித் தேர்வான அலகுத் தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டனர். இந்தநிலையில், இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்த வேண்டும் என்று எவ்வித உத்தரவையும் அதிகாரப்பூர்வமாக அரசுத்தேர்வுகள் துறை பிறப்பிக்கவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சிலர் வெளியிட்ட செயல்முறைகளை அதிகாரப்பூர்வமாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டதாக தெரிவிப்பது மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.