தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு ஆகஸ்ட் 16, 17-ஆம் தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்தி: அண்ணல் அம்பேத்கா், மு. கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவா்களுக்கு பொரவச்சேரி ஆண்டவா் செவிலியா் கல்லுாரியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. மேற்கண்ட தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு போட்டிகள் தொடங்கும். வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவா்களின் பெயா்ப்பட்டியல் கல்லுாரிகளின் முதல்வா்கள் வழியாக மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
போட்டி தலைப்புகள்: அண்ணல் அம்பேத்கா் குறித்த பேச்சுப் போட்டியில், பூனா உடன்படிக்கை, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சா், சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கா் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பௌத்தமும் ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி குறித்த பேச்சுப் போட்டியில், என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகாா், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகா் கலைஞா் ஆகிய தலைப்புகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.