பள்ளி மாணவர்கள் முதல் பட்டதாரிகள் வரை, கணித பாடங்களை எளிமையாகவும், நுண்ணறிவுடனும் புரிந்து கொள்ளும் வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில், ‘அவுட் ஆப் தி பாக்ஸ் திங்க்கிங்’ என்ற இலவச ‘ஆன்லைன்’ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி தேர்வுகளில் கணிதம் சார்ந்த வினாக்களை எதிர்கொள்ளவும், சரியாக பதில் அளிக்கவும், மாணவர்கள் திணறும் நிலை உள்ளது. இதைப் போக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில், புதிய இலவச ஆன்லைன் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:இளைஞர்களுக்கு சிறந்த படைப்பு திறனை ஏற்படுத்துதல், சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், நுண்ணறிவுடன் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுதல் என்ற இலக்குடன், ‘அவுட் ஆப் தி பாக்ஸ் திங்க்கிங்’ என்ற, புதிய ஆன்லைன் இலவச படிப்பை நடத்த உள்ளோம்.
வேலை வாய்ப்பு
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், தங்களின் எதிர்காலப் படிப்பு தொடர்பான தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான போட்டி தேர்வுகளில், நவீன முறை கணித வினாக்களை புரிந்து கொள்ள, இந்த படிப்பு மிகவும் உதவியாக இருக்கும். ஐந்தாம் வகுப்பு படிப்போரில் துவங்கி, அனைவரும் இதில் சேரலாம்.
மொத்தம் நான்கு நிலைகள் உள்ள இந்த படிப்பில், முதல் மற்றும் இரண்டாம் நிலைகளுக்கு, தலா, 20 மணி நேரமும், மூன்று மற்றும் நான்காம் நிலைக்கு, தலா, 30 மணி நேரமும் வீடியோ பாடங்கள் வழங்கப்படும்.கிராம மாணவர்களுக்கு, ‘யு.எஸ்.பி., டிரைவ்’ வழியாக பாடங்கள் பதிவு செய்து தரப்படும். பாடம் குறித்து, மாணவர்களின் சந்தேகம் தீர்க்க குழு அமைக்க உள்ளோம். தற்போது, ஆங்கில வழியில் பாடங்கள் உள்ளன.
விரைவில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் மாற்றப்படும். முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கு ஜூலையிலும், மூன்றாம், நான்காம் நிலைக்கு ஜனவரியிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிப்போர், முதல் நிலை; ஏழாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிப்போர், இரண்டாம் நிலை; ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிப்போர், மூன்றாம் நிலை; பிளஸ் 1 மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள், நான்காம் நிலைகளில் சேரலாம்.
தரவரிசை
ஒவ்வொரு நிலைக்கும் கணினி வழி தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் அமைக்கப்படும். ஐ.ஐ.டி., நிர்ணயிக்கும் மையத்திற்கு நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும். தரவரிசை நிர்ணயிக்கப்படும். விண்ணப்ப பதிவு மற்றும் கூடுதல் தகவல்களை, pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.